முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்..


உங்களுக்கு உங்கள் வாழ்க்கைநிரலை எவ்வளவு தூரம் பின்னோக்கி பார்க்க முடியும் என்றால் எங்கே இருந்து தொடங்குவீர்கள்? அம்மாவின் தாலாட்டு? முதல் பிறந்தநாள்? முடியிரக்கும் போது வெகு அருகில் பார்த்த தாய்மாமனின் முகம்? என் மூளையின் ஞாபககுவியலை எவ்வளவுதான் தோண்டினாலும், எனக்கு ஏனோ நான் முதன்முதலில் பள்ளிக்கு சென்ற (அலங்)கோலம் தான் நினைவுக்கு வருகிறது. இதற்கு காரணம், ஒருவேளை அதற்குமுன் ஒரு ஞானகுழந்தையின் முகத்தை புகைப்படம் எடுக்கும் அரிய வாய்ப்பை என்னை தவமிருந்து பெற்றவர்கள் தவறவிட்டதால் இருக்கலாம். அல்லது அன்றையநாள் கவருமெண்ட்டு பள்ளியில் சேர்ந்த நான் அந்த ஒன்னாப்பு வாத்தியாரின் சாம, தான, பேத மற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்த வெற்றித்திருநாள் என்பதாகவும் இருக்கலாம். புத்தம்புது காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும் மொடமொடக்க, மரச்சட்ட சிலேட்டும் பலப்பமும் மஞ்சள் பையில் பத்திரமாய் தோளில் தொங்க, நெற்றியில் திருநீரும் கையில் பிஸ்கேட்டுமாய்(இல்லை ஜவ்வு மிட்டாயா..?) என் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு என் மூளையை துளக்கி புடம் போட அந்த அறிவுக்கடலின் கரையை தொட்டதாக நினைவு...!

வகுப்பறை வரை தீனியின் மீதே இருந்த முழுக்கவனமும் ஒரு நொடியில் காணாமல் போனது உள்ளே நான் கண்ட காட்சியை பார்த்து...! வேட்டியும் சட்டையும் கையில் ஒரு அடிக்கோலுமாய்(அதாங்க ஸ்கேலு...!) நின்றுகொண்டிருந்தார் ஒருத்தர்.. அவருக்கு முன் வரட்டிக்கு உருட்டி வைத்த சாணி உருண்டைகளை போல ஒரு இருபது உருப்படிகள்...! அவ்வளவு தான்... இத்தனை தலைகளை ஒன்றாய் பார்த்த அதிர்ச்சியோ அல்லது இதுதான் என் அடுத்த 12 ஆண்டுகால அடிமைசாசனத்தின் முதல் பத்தி என்ற என் அறிவின் முதிர்ச்சியோ, என் தற்காப்புக்கலையின் முழுதிறனையும் அங்கே அரங்கேற்ற செய்தது. தாத்தாவின் கைகளை திமிரிக்கொண்டு ஓட, தாத்தா என்னை துரத்திப்பிடித்து அமுக்க, நான் கதறியபடி மூக்கை இழந்த மண்டோதரி போல தரையில் விளுந்து புரள, அந்த வாத்தியார் என்னை அலேக்காக தூக்கி அந்த கும்பலில் போட, நான் கண்களில் நயாகரா அருவியும் மூக்கில் கார்பரேசன் பைப்புமாய்(அதுல தாங்க தண்ணீர் விட்டு விட்டு வரும்..) நாக்கு வரள தொண்டை கிழிய ஒரு தாடியில்லா தேவதாசாக சங்கீதமும்மூர்த்திகள் கண்டறியாத ஒரு சாகித்யத்தை தொடர்ச்சியாக அரங்கேற்ற, அதை கண்டு மிரள மிரள உட்கார்ந்திருந்த ஏனைய சக வித்வான்கள் அவரவர் பக்கவாத்தியத்தை தொடங்க, தாத்தா என்னை தூக்கிக்கொண்டு வெளியே வந்து கெஞ்சியதில் மனமிரங்கி அழுகையை நிறுத்த, அதை நம்பிய தாத்தா மீண்டும் உள்ளே கொண்டு போக, என் அபாயமணி மீண்டும் தொடங்க...தாத்தா வெறுத்துப்போய் வீட்டை நோக்கி நடையை கட்ட, என் கல்விச்சரித்திரத்தின் முதல்நாள் இப்படி அழிரப்பர் இல்லாமலேயே பாதியில் அழிந்தது போயிற்று...

என் வீட்டாரின் ஒருவார விக்கிரமாதித்திய தொடர்முயற்ச்சிகலாலும் தினமும் கிடைத்த முட்டாய்கலாலும் எனக்கு பிறகு "ஸ்கூலு" பிடித்துப்போனாலும், நான் பயந்ததற்கான காரணத்தை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. அந்த ராமச்சந்திரன் சார் தான் எனக்கு ஒன்னாப்பு முதல் அஞ்சாங்க்ளாஸ் வரை அறிவுக்கலவையை கலக்கி குலுக்கி என் மூளையெனும் குடுவையில் ஊற்றியவர். தமிழ், கணக்கு, வரலாறு என அனைத்து துறைகளையும் எடுத்தாளும் அஷ்டாவதனியாக அவர் இருந்தாலும் நாங்கள் பயப்பட்டது என்னவோ அவரது கூமாச்சி மீசையையும் மிரட்டும் கண்களையும் பார்த்து தான். சேகரு, குமாரவேலு, கணேசு, சங்கரு என பல பெயர்கள் நினைவில் இருந்தாலும் "தூக்குபல்லு" சசிகலாவும், "எலிவாலு" சுமதியும் மட்டும் கல்யாண வேட்டியில் பட்ட காப்பி கரை போல பளிச்சென்று கண்முன்னால் வருகிறார்கள். பின்னே..? அஞ்சாம் வகுப்பு கடைசி வரை சசிகலா முதல் ரேங்க்கும், சுமதி ரெண்டாம் ரேங்க்கும், நான் மூணாம் ரேங்க்கும் என்றால் மறக்க முடியுமா என்ன? நான் முதல் இரண்டு இடங்களை பெருமையுடன் அவர்களுக்கு விட்டுக்கொடுத்ததற்கு என் அழியாப்புகழ் ஆங்கில அறிவு மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியும்... Nature -ய் "நெட்டுரே"வாகவும் Discover-கு spelling -ய் "Tisskavor" என்றும் எழுதினால் பிறகு சரஸ்வதிதேவி என்பக்கம் எப்படி வருவாள்? எல்லா பாடங்களும் புரிந்துகொள்ளும் தமிழ் வகுப்பு மாணவர்களுக்கு "இங்கிலீசு" மட்டும் ஏன் பின்புலம் சிரிப்பொலி சேர்த்த இந்தி நாடகம் போல ஒட்டாமல் போகிறது என்று கல்வியாளர்கள் யாராவது ஆராய்ந்தால் தேவலை...!

விடுமுறைநாள் ஒன்றில் தெரிந்தவர் வீட்டுக்கு போவதாய், என் பாட்டி என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே கொடுத்த பிஸ்கெட்டை தின்றுகொண்டு அப்படியே தூங்கிவிட, ஆரம்பித்தது என் மொத்த நீர் பாசனம்... அந்நாளில் தூக்கத்தில் ஒன்றுக்கு போவது என்பது எனக்கு இன்னாளில் அனிச்சையாய் பெண்களை பார்ப்பது போல அத்தனை இயல்பு.. சிரிப்பொலி கேட்டு எழுந்து சுற்றிலும் பார்த்தால், எதிரில் ஒரு சேரில் சசிகலா!! அது அவள் வீடு தானாம். "அம்மா... இவன் என் க்ளாஸ்மேட்டுமா.." என்று அவள் சொல்ல, "இங்க வாடா கண்ணா.." என்று அவர் என்னை கூப்பிட்டு மடியில் வைத்துக்கொண்டார். அன்று நான் நெளிந்த நெளி கம்பளிபூச்சி தோற்றது! ஒரு பெண்ணை பார்த்து நான் பட்ட முதல் வெட்கம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். பிறகு இந்த மூத்திரகதை என் வகுப்பு முழுவதும் பரவி சாகாவரமாய் மோட்சம் பெற்றது தனி கதை.

நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும்? கல்வி உபகரணங்களை சாமிக்கு படைக்க வேண்டும்! சேகரு குடுத்த மாபெரும் ஐடியா இது. புறப்பட்டது எங்கள் ஆறு பேர் கொண்ட புரட்சிப்படை! மைதானத்தின் ஓரமாக இருந்த திறந்தவெளி கழிவறைகழகமான முள்ளுச்செடிகளை விலக்கி இரண்டடிக்கு இரண்டடியில் ஒரு குழியை தோண்டி அதில் பழய சிலேட்டு, துக்கிளியூண்டு பலப்பங்கள், அட்டை கிழிந்த நோட்டுப்புத்தகங்கள் எல்லாம் போட்டு நிரப்பினோம். சேகரு ஒரு புத்தம்புதிய கருப்பு கலர் அசோகா பேனாவையும் உள்ளே போட்ட போதுதான் என் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் தலைதூக்கியது. "எல்லாரும் வேண்டிக்கங்க... பரிச்சை முடியும் வரை யாரும் இந்த பக்கம் வரக்கூடாது... வந்தா பெயிலு ஆயிருவீங்க... எல்லாரும் சத்தியம் பண்ணுங்க..." - மண்ணை போட்டு மூடி அதன்மீது ஒரு பெருக்கல் குறியயும் போட்டுவிட்டு சாமியர் சேகரு சொன்ன அருள்வாக்கு இது...! அந்த காலத்தில் அசோகா பேனா வைத்திருப்பவன் ஸ்டாரு...! கொண்டை மூடியும் பெரிய தங்க கலர் நிப்புமாய் பிரில் இங்க் ஊற்றினால் பேனாவின் உடம்பின் பாதி கண்ணாடியின் வழியாக நிரம்புவது தெரியும்... அப்பொழுதே மூனேமுக்கால் ரூபாய் விலை! என் கையெழுத்து என் தலையெழுத்தை விட மிக மோசமாக இருந்தாலும் அப்படி ஒரு பேனாவுக்காக நான் நீண்டநாள் ஏங்கியது உண்டு. அடிக்கடி தொலைத்துவிடுவதால் என்னிடம் எப்பொழுதும் ஒரு முக்கு உடைந்த பென்சிலு மட்டுமே இருக்கும். அன்றையதினமே சாயங்காலமாய் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்துக்கு சென்று, நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொள்ள அந்த பேனாவை மட்டும் கிளப்பிவந்துவிட்டேன். என் வாழ்வில் நான் அறிந்து செய்த முதல் திருட்டு...! பயல்கள் யாருக்கும் தெரியாமல் அந்த பேனாவை மறைத்த படியும், பரிச்சைல பெயிலு ஆகிருவமோ என்ற பயத்திலும் நான் வளைய வந்த நாட்கள் தற்போதய பின்லேடனின் வாழ்வியலுக்கு ஒப்பானது. அப்போதே செய்த சத்தியத்தை காப்பாற்றியதாலோ(!?) அல்லது நான் அந்த வருடம் பாஸாகி விட்டதாலோ, அதன்பிறகு நான் சத்தியம் செய்ய தயங்கியதே இல்லை...! ஒரு அறியாச்சிறுவன் அல்ப ஆசையில் செய்த தவறை கடவுள் மன்னித்துவிட்டதாகவே என் மனதை தேற்றிக்கொண்டேன்...!

நீங்கள் வகுப்புதலைவனாக இருந்திருக்கிறீர்களா? வகுப்பில் பேசுபவர்கள் பெயர்களை எழுதிவைப்பதும், பானையில் தண்ணீர் பிடித்துவைப்பதும், ப்ரேயரின் போது அனைவரையும் வரிசையில் அழைத்துப்போவதும் தவிர மிக சுவாரசியமான வேலை ஒன்று உண்டு! ரவிவர்மா எப்படி ஓவியம் வரைந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கரும்பலகைக்கு கரிச்சாயம் பூசியதை அவரைவிட நாங்கள் மிக அதிகமான கலைநயத்தோடு செய்ததை ராமச்சந்திரன் சாராலும் மறுக்க முடியாது! எங்கள் விழுப்புண்களுக்கு சர்வரோக நிவாரணியான எருக்கம்பால் தரும் எருக்கன்செடிகளை தேடி கிளம்பினால் சந்தனவீரப்பர்(மரியாதையை குடுத்துடுவோம்.. எதுக்கு வம்பு..? அப்புறம் அந்த சாதி தலைவரை நம்மால சமாளிக்க முடியாது!!) இருந்த காட்டை தவிர மற்ற அனைத்து பீக்காட்டிலும் எங்கள் கால்தடம் பதியும். பை நிறைய இலைகளுடன் வரும் வழியில் கரிக்கடையில் கெஞ்சி தூளு கரிகளை பொருக்கிக்கொண்டு தட்டையான பெரிய கல்லாக பார்த்து அதில் மொத்த மூலப்பொருள்களையும் கொட்டி, ஆளுக்கு ஒரு சொட்டாங்கல்லுடன் நான்குபேர் சுற்றியமர்ந்து தேய்க்க ஆரம்பித்தால் ஒருமணி நேரத்துக்கு சூடு பறக்கும். சங்கரின் நிறத்தியும் மிஞ்சும் கருமை வந்தவுடன் அதை வழித்தெடுத்து, மற்ற சகாக்கள் காதில் புகையுடன் பார்க்க, வாத்தியாரின் பென்ச்சில் ஏரி பூச ஆரம்பித்தால், கடைசிமணி அடிப்பதற்குள் எங்கள் "மாஸ்டருபீசு" முழுமை அடைந்துவிடும். சுவரின்றி சித்திரம் வரைய முடியாது. ஆனால் அந்த சுவரையே சித்திரமாக வரைந்த கலைமாமணிகள் நாங்கள்..! இதற்காக பணமுடிப்பு என்றும் எங்களுக்கு கிடைத்ததில்லையானாலும், கையில் கரி ஒரு வாரமாகியும் போகாததற்காக வீட்டில் முதுகை பழுக்கவைத்துவிடுவார்கள்.

வீட்டுப்பாடம் செய்யாததற்கான தண்டனையாக "பொம்பளபுள்ளை"ங்களின் நடுவே உக்கார வைத்ததற்க்காக தேம்பி தேம்பி அழுததும், செல்லாத ஓட்டை பத்து பைசாவை கண்தெரியாத கிழவிகடையில் கொடுத்து இலந்தவடை வாங்கி திண்றதும், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் நமக்கும் அப்பம் தருவார்கள் என்று சென்று ஏமாந்து அதன் மூலம் நான் "இந்து" என்ற உண்மையை அறிந்துகொண்டதும், தீபாவளியன்று வெடிக்காத லெச்சுமிவெடிகளை பொறுக்கி அதிலிருந்து சொந்த வெடிகுண்டு தயாரித்த நிபுணத்துவத்தையும், வினாயகசதுர்த்திக்கு தேங்காயினுள் பருப்பு வெல்ல கலவையை போட்டு தீயினில் சுட்டுதின்ற சுவையையும், எப்பொழுதும் மற்ற பிஸ்த்துகளிடம் குத்து வாங்கியே உடைந்த என் பம்பரங்களையும், பிரித்தவுடன் முகர்ந்து பார்க்கும் புத்தம்புது லயன், முத்து காமிக்ஸின் மணத்தையும் இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.

என்றாலும் நினைத்துப்பார்க்கும்பொழுது அந்த வயதில் எந்த எதிர்வினையும் இன்றி ஏற்றுக்கொண்ட இந்த நிகழ்வுகள் எல்லாம் இனிப்பாகவே இருக்கிறது. இந்த வயதில் நம் எதிர்வினைகளால் வரும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும்பொழுது அன்றுகிடைத்த நிறைவுகளை இப்படி அசை போடுவதால் மட்டுமே நினைவுகளில் மட்டும் கொண்டுவரமுடிகிறது..

ம்.. என்ன சொல்லி என்ன?


தெரிந்தே தொலைக்கிறோம்
வாழ்க்கையை...
வாழ்க்கையை தேடுவதாக
எண்ணிக்கொண்டு...!

கருத்துகள்

 1. நல்ல பதிவு. மிகச்சில வித்தியாசங்களைக் களைந்துவிட்டால் நம் அனைவருக்கும் பொதுவான பால்ய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. காலச் சுழலில் சுற்றிச் சுழன்று எங்கோ செல்லும் அவசரத்தில் அவற்றைத் தொலைத்துவிட நேருவது சோகம். இன்று அசைபோடுமளவிற்காவது நினைவுகளைத் திறக்க முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

  என் வலைப்பதிவிற்கு வந்து வாசித்தமைக்கு நன்றிகள்.

  அன்புடன்
  சுந்தர்.

  http://agaramuthala.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. அருமையாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ. இடக்கிடை தான் உங்களக் காணக்கூடிதாயிருக்கு. நாங்கள் அடிமட்டம் எண்டுதான் பாவிக்கிறனாங்கள். அது ஏன் அடிமட்டம் எண்டு பேர் வந்ததெண்டு யோசிக்கிறனான்.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமை!! சரளமான நடை!! பல இடங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன்!!!

  பதிலளிநீக்கு
 4. wowwwwwwwwww...really u had all these fun in your childhood......lucky you :)) all sound soooo cooool......damn my dad...he never allowed us to stay at my granma'a place....otherwise i wud have enjoyed one or two of your experiences......all too late now...long gone are those days.....anyway... i enjoyed readin your blog.....by the way, i just loved your accent....avanunga, ivanunga......exactly like the way they talk n my moms place.... good work..keep going - kavithaayini

  பதிலளிநீக்கு
 5. பால்ய கால பள்ளி நினைவுகள் பசுமையான பொக்கிஷங்கள். என்றும் மறந்துவிடலாகாது.

  உங்கள் முதல் வகுப்பு பிரவேசம் நல்ல நகைச்சுவையான சம்பவம்தான்(இன்று அசைபோடும்போது). அதே அன்றைய மனநிலையில் பேராபத்தில் மாட்டிக்கொண்டதாய் உள்ளுணர்வு சொல்லும் அல்லவா?

  மற்றபடி நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாமக்கல் டவுன் பள்ளியில்தான் படித்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 6. //வீட்டுப்பாடம் செய்யாததற்கான தண்டனையாக "பொம்பளபுள்ளை"ங்களின் நடுவே உக்கார வைத்ததற்க்காக தேம்பி தேம்பி அழுததும், செல்லாத ஓட்டை பத்து பைசாவை கண்தெரியாத கிழவிகடையில் கொடுத்து இலந்தவடை வாங்கி திண்றதும், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் நமக்கும் அப்பம் தருவார்கள் என்று சென்று ஏமாந்து அதன் மூலம் நான் "இந்து" என்ற உண்மையை அறிந்துகொண்டதும், தீபாவளியன்று வெடிக்காத லெச்சுமிவெடிகளை பொறுக்கி அதிலிருந்து சொந்த வெடிகுண்டு தயாரித்த நிபுணத்துவத்தையும், வினாயகசதுர்த்திக்கு தேங்காயினுள் பருப்பு வெல்ல கலவையை போட்டு தீயினில் சுட்டுதின்ற சுவையையும், எப்பொழுதும் மற்ற பிஸ்த்துகளிடம் குத்து வாங்கியே உடைந்த என் பம்பரங்களையும், பிரித்தவுடன் முகர்ந்து பார்க்கும் புத்தம்புது லயன், முத்து காமிக்ஸின் மணத்தையும் இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.
  //

  super! reminded me of similar incidents in my life.

  பதிலளிநீக்கு
 7. சூப்பருங்க... அதிலும் //இந்த வயதில் நம் எதிர்வினைகளால் வரும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும்பொழுது // இந்த வரிகள் மறக்க முடியாதவை.

  எல்லாம் சரி - இங்கதான் கொஞ்சம் இடிக்குது. //நான் கதறியபடி மூக்கை இழந்த மண்டோதரி போல தரையில் விளுந்து புரள// மூக்கையிழந்தது சூர்ப்பனகையாச்சே....

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்களை வைத்து பத்து பதிவாவது போட்டிருக்கலாம், அல்லது ஒரு திரைப்படத்திற்கான ப்ளாஷ்பேக் காட்சிகள் எடுத்திருக்கலாம்.

  குட்டி இளவஞ்சியின் குறும்புகள் அருமையோ அருமை!

  உங்கள் குட்டிப்பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. லக்ஷ்மி,

  // மூக்கையிழந்தது சூர்ப்பனகையாச்சே.... // :)))

  ஆமாங்க! தவறை சுட்டியமைக்கு நன்றி!

  வெயிலான் ,
  // நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்களை வைத்து பத்து பதிவாவது போட்டிருக்கலாம் //

  இதை எழுதி ரெண்டு வருசத்துக்குமேல ஆகுதுங்க! அப்பத்தான் வந்த புதுசு! இதை அடிச்சு முடிக்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடுச்சு! இதையே பதிவாகவா?! :)))

  நண்பர்களின் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 10. எல்லாரும் அனுபவிச்சதுதான்...எல்லாருஞ் செஞ்சதுதான்...எல்லாரும் தொலைச்சதுதான்...ஆனா நீங்க மட்டும் பதிவு போட்டுட்டீங்க :)

  எனக்கு நினைவிருக்குற ரொம்பச் சின்ன வயசு நினைவு ஒன்னு உண்டு. அது இன்னமும் மறக்கலை. என்னையக் கையில தூக்கி வெச்சிக்கிட்டு எங்கத்த...எங்கம்மாவக் காட்டி...அது யாரு சொல்லு...யாரு சொல்லுன்னு கேட்டது. அவங்க காட்டுன எடத்துல எங்கம்மா...இதுதான் எனக்கு நினைவிருக்கும் என் வாழ்க்கையின் முதற்றுளி. அப்ப வெளாத்திகொளத்துல இருந்தாங்களாம். நான் கைக்குழந்தை.

  நீங்க ஞாயித்துக்கெழமை அப்பம் வாங்கப் போய் தெரிஞ்சிக்கிட்டீங்க. ஆனா எனக்கு வேற மாதிரி. தூத்துடி சேவியர்ஸ் ஸ்கூல்ல கிருஸ்துவப் பசங்கள ஒவ்வொரு நாளு மதியம் மூனாவது பீரியட் முடிஞ்சதுமே சர்ச்சுல எதுக்கோ கூப்புடுவாங்க. அன்னைக்கும் அப்பிடிக் கூப்டுவிட்டாங்க. இந்தப் பயகளப் பூசைக்குப் போங்கன்னு வாத்தியார் சொல்லீட்டாரு. எனக்கோ ஆர்வம் தாங்கலை. நானும் கெளம்பீட்டேன். வாத்தியார் பாக்கலை. ஆனா ஒரு பய பாத்துட்டான். வாத்தியார் கிட்ட போயி..ஒரு இந்துப் பையனும் போறான்னு சொல்லப் போக...பிரம்பாம்பழம் கைல பழுத்ததும்...அடுத்த வகுப்பு முழுக்க முட்டி போட்டதுந்தான் நடந்தது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு